Monday, January 7, 2013

இசைத்தமிழா : பாடல் வரிகள்




பல்லவி

ஐரோப்பா USA ASIA எங்கிலும் துள்ளித் திரியும் என்றும் உந்தன் இசை தானே
பேஸ்புக்கில் எப்.எம் மில் டி.வி யில் கேட்பது இசைப்புயலாய் வரும் உன் குரல் தான்

ரோஜாவில் பூத்தது உன்விரல் மெல்லிசை
"கடல்"களிலும்  அதன் வாசனை

ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் உன்னிசை
அலை போல வரும்

கோரஸ் :

என்றும் மனதில் துள்ளும் ஒருமான்
அம்மான் ஏ.ஆர் ரகுமான்
மூன்றே எழுத்தில் உலகம் எதுவோ
அது தான் ஏ. ஆர். ரகுமான்

சரணம் 

துல்லியமாய் என்றும் நின்றிடும் பாடல் தந்திடுவாய்
அற்புதமாய் நெஞ்சிலே

மந்திரமாய் உந்தன் பாடலை ஆகிடச் செய்திடுவாய்
நிச்சயமாய் வெற்றி  நீ பறிப்பாய்

நீ இசைக்கும் பாடல் நம்பிக்கையே
அதனால் ஜொலிக்கும் நம் வாழ்க்கையே

   உன் படங்கள் நெஞ்சில் ஓர் தாக்கமே
   அது தான் நினைவைத் தாலாட்டுமே

என்றும் மனதில் துள்ளும் ஒருமான்
அம்மான் ஏ.ஆர் ரகுமான்
மூன்றே எழுத்தில் உலகம் எதுவோ
அது தான் ஏ. ஆர். ரகுமான்

Saturday, December 22, 2012

ஒருநாள் போடியிலிருந்து ஓய்வு பெறும் சச்சினுக்காக...

சாதனை மன்னனே,
கிரிக்கெட்டின் கண்ணனே ,

ஒருநாள் போட்டியிலிருந்து
ஓய்வு பெறப்போவதாகக்
கூறிவிட்டாய் ;

நீ ஓய்ந்து போனாலும்
நீ அடித்த ஷாட்டின்
அலை ஓய்ந்து போகுமா ?

நீ பாட்டிங் ஆடி
பந்தாடும் காட்சி
ரசிகனின் மனதில்
நிலை மாறிப் போகுமா ?

உன்னோடு தானே
நாங்கள் வளர்ந்தோம் - நீ
எங்கெங்கு போனாயோ
அங்கங்கு போனோம் ;

பள்ளிக்குச் சென்றாலும்
பரிட்சைகள் எழுதினாலும்
நான் வாங்கும் ஸ்கோரை
ஒருபோதும் மதிக்காமல்
நீ வாங்கும் ஸ்கோரையன்றோ
முப்போதும் மதிப்போம் !!

இருநூறு எடுத்தாலும்
இருபது ரன் எடுத்தாலும்
கடவுளைப் போலுன்னைக்
கும்பிட்டு நிற்போமே !!

இந்தியாவின் 29 ஆவது
மாநிலம் நீயல்லவா !!
எல்லா மாநிலமும்
நீயே அல்லவா !!

நாட்டின் ஆசையெல்லாம்
உன்னாசை தானே !!!
உன்னாசை எல்லாம்
நாட்டாசை தானே !!!

விளையாடும் போது
உனக்கு இந்தியா தொப்பி ;
விளையாட்டில் நீயே
இந்தியாவின் தொப்பி ;

விளையாடும் போதும்
விளையாடா விட்டாலும்
அந்தத் தொப்பி
இறங்கு வதில்லை ;

நீருள்ளவரை, நிலமுள்ளவரை,
வாழ்க நின் நாமம் !!
வளர்க நின் புகழ் !!

ஐந்துநாள் போட்டியில்
மீண்டும் சந்திப்போம் ;

Thursday, December 20, 2012

நாகமாணிக்க வேட்டை – 2 – வேலன் புறப்பட்டான்

ஆனைமலை தன்னில் 
ஆனைபலம் கொண்ட 
வீரப்புகழ் மிக்க
வேலன் வாழ்ந்தான்

நாகலோகம் சென்று
நங்கையொருத்தி கொண்டு
நாடு திரும்பிவர
ஆசைப் பட்டான்

ஆறு மாதங்களில்
ஆறு தனைக்கண்டு
நங்கையோடு வர
அன்னை சொன்னாள்

ஆறு மாதங்களில்
ஆறு இல்லையெனில்
வேறு வேலையிலை
வருக என்றாள்

அன்னை சொன்னமொழி
வேதமென்று அவன்
ஆனைமலை விட்டு
தூரம் போனான்

சோலைமலை சென்று
காளி கோவில் கண்டு
உண்டு குடித்தவன்
தூங்கிப் போனான்

பகல் எனக்கொரு
இகல் எனும்படி
புகல் இடந்தேடி
இருளும் வந்தான்

இருள் தனக்கொரு
பொருள் தரும்படி
அருள் ஒளிகொண்டு
நிலா வந்தாள்

நிலா தனக்கொரு
கனா எனும்படி
பலா போன்றதொரு
பாவை வந்தாள்

வீர வேலனவன்
தூக்கம் கெட்டான்
பாவை பார்த்துவிட
ஆசைப் பட்டான்

வேலிருந்தும் வந்த
தூக்கம் தன்னை
வீறுகொண்டு அவன்
வெல்ல வில்லை

தூணின் மறைவிலவன்
ஒளிந்து கொண்டான்
காண அரியதோர்
காட்சி கண்டான்

காளி தனைக்கண்டு
பக்தி மிகக்கொண்டு
பாத மலர்தொட்டு
பூசை செய்ய

தங்கப் பழங்கொண்டு
தங்க மலர்கொண்டு
தங்க விளக்கோடு
தங்கம் போலே

தங்கக் குடத்தோடு
தண்ணீர் கொண்டுவர
அருகி ருந்தவொரு
வாவி சென்றாள்

தண்ணீர் பட்டவுடன்
பன்னீர் மங்கையவள்
தங்கக் குடமங்கு
மூழ்கிப் போக

பூசைத் தட்டையவள்
நீரில் முங்கியதும்
பூசைத் தட்டுமுடன்
மூழ்கிப் போக

தண்ணீர் பார்த்தவள்
கண்ணீர் விட்டாள்
அப்பு நீரிலவள்
உப்பும் போட்டாள் 

அழுகை வேலனவன்
நெஞ்சில் பாய
அழகு தேவதையின்
அருகில் போனான்

பெண்ணே உன்
பேரென்ன என்றான் 
விடையொன்று தான்
கேட்க நின்றான்

பொன்மாலை நேரமும்
போன பின்பு
பொன்மாலை போலங்கு
வந்த பெண்ணும்

பொன்மாலை என்
பேர் என்றாள் ;
தேவலோகம் என்
ஊர் என்றாள் ;

"மனிதர் யாவரும்
பார்க்கா வண்ணம்
பூசை செய்யவே
இரவில் வந்தேன் ;

ஒவ்வொரு நாளும்
குடமும் தட்டும்
குளம் தொட்டதும்
மூழ்கிப் போகும்

மாயம் யாதெனத்
தெரிதல் இன்றி
காயம் மேவிட
கரையில் நின்றேன்

காளி தேவிக்கொரு
பூசை செய்ய
பாவி எனக்கொரு
வழியும் இல்லை"

என்று பாவையவள்
கண்கள் பனித்தாள் ;
கண்கள் பனித்ததும்
வேலன் பணிந்தான் ;

குளத்துக் குள்ளே
நானும் சென்று
பொருள் யாவையும்
கொணர்ந்து வருவேன்

அதுவரை கரையில்
இருங்கள் என்றே
அவனும் உடனே
குளத்தில் குதித்தான் ;

குளத்துக் குள்ளே
கும்மிருட் டிருந்தும்
மீனைப் போலவன்
நீச்சல் செய்தான் ;

சற்று நேரத்தில்
ஒளிகோடி வெள்ளம்
கண்களைத் தின்னும்
காட்சி கண்டான் ;

ஒளியை நோக்கித்
தானும் சென்றான் ;
ஒளியைக் கண்டதும்
ஒளிமயம் ஆனான் ;

அந்த ஒளி
தெய்வ ஒளி ;
அருளைப் பாய்ச்சும்
காளி ஒளி ;

கரையில் கண்ட
காளி கோவில்
நீரின் அடியில்
இருத்தல் கண்டு

உள்ளம் உடலம்
சீவன் எல்லாம்
தன்னால் அங்கே
உருகக் கண்டான்;

தீயில் பொருட்கள்
உருகு வதுண்டு ;
நீரில் பொருட்கள்
உருகு வதுண்டோ ?

ஆனால் வேலன் 
மனிதன், எனவே
நீரில் அவனும்
உருகிப் போனான் ;

கோவில் உள்ளே
அவனும் போக
மலரின் வாசம்
வீசப் பெற்றான் ;

நீருக் குள்ளே
சுடரும் விளக்கை
கண்கள் விரியத்
தானும் கண்டான் ;

காளியின் சிலையை
கண்ணில் கண்டு
"அம்மா " என்றே
பாதம் தொட்டான் ;

காளி மகிழ்ந்து
காட்சி தந்தாள் ;
வேலன் சிரத்தைத்
தாழ்த்தி நின்றான் ;

"வேலா உன்னால்
உள்ளம் மகிழ்ந்தோம் ;
சேவை குணங்கண்டு
நாமும் நெகிழ்ந்தோம் ;

என்னருள் உனக்குக்
கூடி வரும் ;
தருவேன் உனக்கு
இரண்டு வரம் ;"

என்று காளி 
கனிந்து சொன்னாள் ;
வேலன் உடனே
பணிந்து சொன்னான் ;

"கரையில் அங்கே
கன்னி ஒருத்தி
உன்னைப் பூசிக்க
உள்ளம் கொண்டாள் ;

அவளுக் கொருவழி
நீயும் சொன்னால்
ஆறுதல் எனக்கு
உண்டு என்றான் "

காளி உடனே
அவனைப் புகழ்ந்து
நல்ல தாயொரு
வார்த்தை சொன்னாள் ;

"ஆடம் பரங்கள்
ஆகா தெனக்கு
அன்பு ஒன்றையே
நெஞ்சில் கொண்டு

அம்மா என்றெனை
அழைத்தால் போதும்
அக்கணமே நான்
வருவேன்" என்றாள் ;

வேலன் உடனே
உவகை கொண்டு
இரண்டாம் வரத்தை
கேட்க லுற்றான் ;

"நாகலோகம் சென்று
இளைய அரசியை
நானும் கொண்டு
நாடு திரும்ப

அன்னாய் நீயொரு
வழி சொல்வாய் ;
நீயே என்
சரணம்" என்றான் 

"விடிந்த உடனே
மேற்கில் போ, 
கண்ணில் தெரியும்
புற்றைக் காண்,

புற்றின் வழியே
நடந்து சென்றால்
நாக லோகம்
நீயம் போகலாம்


ஆனால் அதற்கொரு
பாம்பாக வேண்டும்
பாம்புகள் மட்டும்
அவ்வழி போகும்

நான் உனக்கொரு
மாத்திரை தருவேன் 
மாத்திரை உண்டால்
பாம்பாய் ஆவாய்

ஒருமணி நேரம்
மட்டும் தான்
மாத்திரை அது
வேலை செய்யும்

ஆதலின் நீயும்
அதையே உண்டு
கானகம் நீங்கி
வானகம் போவாய்"

என்று காளி
நல்வழி சொன்னாள் ;
வேலன் கேட்ட
இருவரம் தந்தாள் ;

காளி அன்னையின்
பாதம் தொட்டு
வேலன் அவளின்
இன்னருள் பெற்று

மேற்குத் திக்கை
நோக்கிப் போனான்
போன பின்பு
என்ன ஆனான் ?
































Thursday, December 13, 2012

யார் எழுதிய பாடல் ?

இந்தப் பாடல் நற்றாயிரங்கல் என்னும் துறை. தன் மகள் காதல் துன்பத்தால் வருந்துவது கண்ட தாயொருத்தி மனம் தாளாமல் பாடும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. 

நான் கொடுக்கும் இந்த விளக்கம் அமரன் கதை என்ற நூலில் பாரதியின் பேத்தி விஜயா பாரதி எழுதியது.

பாடல் : 

கவுண்டவுண்ட தெனமாரன் கணைபொழிய
மிகச்சோர்ந்து கண்ணீ ராற்றிற்
கவுண்டவுண்ட மார்பினளாய் மகளுன்னை
நினைந்துமனங் கரையா நின்றாள்
கவுண்டவுண்ட சீதையினை மாலையிட்ட
பெருமானே கவுண்ட  னூரிற்
கவுண்டவுண்ட ராமசாமித் துரையே
விரைவில் கலவி செய்யே

பாடல் வகை : யமக அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தப்பா


கவுண்டவுண்டதென = இதைக் கவுண்  தாவுண்டது என எனப் பிரிக்க வேண்டும் . அதாவது , கவுண் கற்கள் தாவி வருவது போல. இதில் கவுண்டாவுண்ட என்றிருக்க வேண்டியது குறுக்கல் விகாரத்தால் கவுண்டவுண்ட என்று ஆனது.

மாரன் = மன்மதன்

கணைபொழிய = கணைகளைப் பொழிய, மலர் அம்புகளைப் பொழிய

(கவுண் கற்களைப் போல் மலர் அம்புகளைப் பொழியும் மன்மதன்)

மிகச்சோர்ந்து = மிகவும் சோர்ந்து

கண்ணீராற்றில் = கண்ணீர் என்னும் ஆற்றில்

கவுண்டவுண்ட மார்பினளாய் = கவ்வுண்ட, உண்ட மார்பினளாய் 

கவ்வப்பட்ட, உருண்ட மார்பினை உடையவளாய் . இங்கே கவ்வுண்ட என்பது விகார விதியால் கவுண்ட என்று ஆனது. உருண்ட என்பது தொல்காப்பியத்தின் கெடுதி அதிகார விதிப்படி உண்ட என்று ஆனது. 

மகள் = இதற்குப் பொருள் சொல்ல வேண்டியதில்லை.

உன்னை நினைந்து மனம் கரையா நின்றாள் = இங்கே கரைய என்பது கரையா என்று ஆனது.

கவுண்டவுண்ட சீதையினை = இதை, கா உண்டு, அவ்வுண்டு, அ சீதையினை என்று பிரித்துப் படிக்க வேண்டும்.

இலங்கையில் ஒரு கா உண்டு. கா என்றால் சோலை. இங்கே அசோகவனம். உண்டு என்றால் இங்கே இருந்த என்ற பொருள். அவ்வுண்டு என்றால் , அந்த இடத்திலே இருந்த என்று பொருள்.இங்கே காவுண்டு என்பது கவுண்டு என்று குறுகியது. 

அ - அந்த, சீதையினை - சீதா தேவியை

(அசோகவனத்தில் இருந்த சீதையை)

மாலையிட்ட பெருமானே = சீதா தேவியின் நாயகனாகிய , ராமனுக்கு நிகரானவனே

(எட்டயபுர மன்னனின் பெயர் ராமசாமித்துரை. இங்கே கடவுளும், மன்னனும் ஒன்றாக பாவிக்கப்படுகிறார்கள். பெயர் ஒன்றாக இருப்பதாலும், குணப்பெருமைகள் சமமாக இருப்பதாலும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. மேலும், வேதங்களின் கூற்றுப்படி அரசன் மகாவிஷ்ணுவின் அவதாரம். இராமனும் மகாவிஷ்ணுவின் அவதாரம்)


கவுண்டனூரில் = கவுண்ட மா நகரில்

கவுண்டவுண்ட ராமசாமித்துரையே = கவுண்ட வம்சத்தில் உதித்த ராமசாமித்துரை மன்னனே. இங்கே உண்ட அறுசுவை உணவுகளைச் சாப்பிடுகிற மன்னனே.

(எல்லோரும் உண்பதைப் போலல்லாமல் தேவர்களைப் போல் அரிய உணவு வகைகளை உண்ணும் மன்னன் என்பதற்காக உண்ட என்ற சொல் போடப்பட்டிருக்கிறது)

விரைவில் கலவி செய்யே - கூடிய சீக்கிரம் என் பெண்ணோடு ஒன்று சேர்க.

பி.கு = இப்பாடல் சுப்பையாவை சுப்பிரமணிய பாரதியாராக மாற்றிய பாடல்.  இதற்குப் பிறகு தான் என் தாத்தாவிற்கு பாரதி என்ற பட்டம் கிடைத்தது.





Saturday, December 1, 2012

1. ஒளியில் ஓர் இருள்


யாருமே இல்லாத மொட்டை மாடியில்
காற்று மட்டுமே சடுகுடு பாட
பாறை போலே அசையா திருந்து
ஊரை எல்லாம் நோட்டம் விட்டான்
ஊறிச் சலித்த உத்தமன் ஒருவன்

வைர நகைகளை தூவென்று தள்ளி
கறுப்பு நிறத்து வான அவையில்
மேகத் தாதியர் வழிவிட்டு நிற்க
தேகம் முழுதும் பளிச்சென்று சுடர 
தெள்ளென்று வந்தாள் வெண்ணிலா ராணி
வீணை இல்லாத வெள்ளை வாணி
நிலா ராணியென்று பெயருற்ற போதும்
நின்றவாறே அவள் கோலோச்சி நின்றாள்
சட்டென்று வந்தது ஒளிகோடி வெள்ளம்

மேலே பார்த்தது போதுமென் றெண்ணி
மேலே இருந்து நகரைப் பார்த்தான்
காதல் கதையின் கவிதை நாயகன்

வண்ண வண்ணப் பொடிகள் போல
வெள்ளை பச்சை சிவப்பு மஞ்சள் 
தங்கம் வைரம் வெள்ளி என்றே
பற்பல நிறத்தில் ஒளிர்ந்தன விளக்குகள்
பற்பல  வகையில் தெறித்தன ஒளிகள்

நகரை விழியால் நகர்ந்து பார்த்தவன்
எதிரே நின்ற சாலை விளக்கை
ஓரிரு நொடிகள் வெறித்துப் பார்த்தான்
நீண்ட உடலுற்ற மின்மினி ஒன்று
விட்டு விட்டு ஒளிர்தல் போலே
முணுக் முணுக்கென்று எரிந்தது விளக்கு
விட்டு விட்டது எரிந்த போதும்
அந்த ஒளியையும் விட்டி ல்லாமல்
வந்து நெருங்கின விட்டில் பூச்சிகள்
விட்டிலை விட்டிலை காதல் பூச்சுகள்

சாலை விளக்கை வெறித்த பின்பு
காலை வருடிய கறுப்புப் பேசியை
கையில் எடுத்து உற்றுப் பார்த்தான்
தையல் கிழிந்த நெஞ்சைக் கொண்டோன்

பேசி எடுத்தவன் பேச்சற்றி ருக்கையில்
பேசி இடத்திலும் பேசியது ஒளி
பேசி பார்த்ததும் வீசியது வலி
வளியைப் போலே வலியும் வீசிட
பேசிகொண்டு தினம் பேசிப் பார்த்தவன்
பேசி பார்க்காது வீசி எறிந்தான்
விழுந்த இடத்திலும் விழுந்தது ஒளி

தென்றல் வந்து தீண்டிய பின்னே
மரமே மெதுவாய் ஆடி நிற்கையில்
ஆடாதி ருக்குமோ சின்னப் பூச்செடி  ?

அஃதே போல,

தன்னைச் சுற்றிலும் விளக்குகள் எரிய
அவனின் மனதிலும் விளக்கொன்று எரிந்தது

அந்த விளக்கு எந்த விளக்கு ?
கறுப்பை உமிழும் கறுப்பு விளக்கு

வானில் தெரியும் வெள்ளி நிலாவும்
மாதம் ஒருநாள் மறைந்து போகும்
தெருவில் எரியும் வண்ண விளக்கும்
மின்விசை சொன்னால் அணைந்து போகும்

ஆயின்,

அவனின் மனதில் எரிந்த விளக்கோ
அணையா தவனை ஆக்கிரமித்து
ஹாஹா ஹாஹா ஹாஹா வென்றே 
பேயைப் போலே வெடித்துச் சிரித்து
அவனை முழுதாய் ஆட்டிப் படைத்தது
ஓயாத வனை வாட்டி வதைத்தது

பொத்தான் இல்லை எந்திரம் இல்லை
எதுவும் இல்லை விளக்கை அணைக்க

அணைந்து போயென்று சீறிய போதும்
அணைந்து விடேனென்று கெஞ்சிய போதும்
சொல்லிய சொல்லை கேட்கா வண்ணம்
வண்ணம் இன்னும் கூட்டிய வாறு
ஒளிகூடி நின்றது கறுப்பு விளக்கு

அவனின் இதயம் தவித்துத் தவித்து
தவிப்பிற் கேயோர் எல்லை கடந்து
ஆயிரம் சில்லாய் சிதறிப் போனது

சில்லு சில்லாக சிதறிய போதும்
துண்டு துண்டாக உடைந்த போதும்
சில்லில் துண்டில் சின்னஞ் சிறிதாய்
சிரித்து நின்றது கறுப்பு விளக்கு
பொறுப்பு தவறா சிறப்பு விளக்கு

இனிமேல் எதையும் தாங்கும் எண்ணம்
எனக்கு இல்லை என்றே சொல்லி
புயலில் பெயரும் மரத்தைப் போலே
அவனும் உடனே மண்ணில் சாய்ந்தான் 

சுற்றி எங்கிலும் ஒளிமழை பெய்ய
சுற்றி அவனைச் சூழந்து நின்று
பாழும் இருட்டு கவிந்து வந்தது
கறுப்புக் குழம்பாய் குவிந்து வந்தது

- தொடரும்

Wednesday, October 31, 2012

யார் அவன் ?


                                          

பெண்ணில்  அழகாய்க் கருவாகி
பென்னம் பெரிய தொன்றாகி
மண்ணில் வந்த மனிதர்கள்
மறைத்து வாழும் பொருளாகி
கண்ணில் எளிதில் தோன்றாமல்
கரத்தில்  கடிதில் சிக்காமல்
எண்ணில் அடங்கா மேகம்போல்
ஏகம் தன்னைச் செற்றிடுவான்

தேயும் நிலவைப் போலிருந்து
தளர்ந்தே பின் வளர்ந்திடுவான்
பாயும் வெள்ளம் போலாகி
பரந்து விரிந்து திரிந்திடுவான்
வீயும் எண்ணம் இல்லாமல்
வீரம் கொண்டே விளங்கிடுவான்
மாயும் வரையில் நச்சியதை
மறதி இலாது காத்திடுவான்

ஆசை என்னும் கடலினிலே
அல்லும் பகலும் முங்கிடுவான்
பூசை போலே மேலேறி
புவியில் நிதமும் தாவிடுவான்
தூசை வாரித் தலைமேலே
தூக்கிப் போடும் வேழம்போல்
மாசை மறுவை மட்டின்றி
மார்போ  டணைத்து மகிழ்ந்திடுவான்
இன்பம் வந்து சூழ்கணத்தில்
இசைக்கும் குழல்போல் மாறிடுவான்
துன்பம் ஆங்கு மேவிடவே
துவைக்குந் துணிபோல் ஆகிடுவான்
அன்பை அறனை அழித்தொழித்து
அற்பப் பதராய் அழிந்திடுவான்
பொன்னும் பொருளும் அள்ளிவந்து
போதா தென்றே வாழ்ந்திடுவான் 

பணியா திந்த உலகினிலே
பலவாய் வினைகள் செய்துவந்து
அணியா திருக்கும் அணிகலனாய்
அழகாய்  நம்மை அலங்கரித்து
தணியா தென்றும் தானிருந்து
தானாய் என்றும் செயல்பட்டு
பிணியாய் இனிதே உருமாறி
பிணைத்துக் கொல்லும் உள்ளமவன்

Monday, October 29, 2012

எட்டே கால் - ஒரு கதைக் கவிதை


வெளியே வெப்பத்தையும்
உள்ளே தட்பத்தையும்
தந்து கொண்டிருந்தது ஏசி ;

உள்ளே வெப்பத்தையும்
வெளியே தட்பத்தையும்
தந்து கொண்டிருந்தது என் நாசி ;

ஏழரைக்கு வருவதாய்
சொல்லியிருந்த  நண்பன் - பிறகு
தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு
ஏழரையை எட்டாக்கி
எட்டை எட்டே காலாக்கினான் ;

அதைச் சொல்ல
செல்லில் இரண்டு 
மூன்று காலாக்கினான் ;

அது நவ
நாகரிக இளைஞர்
மொய்க்கும் காப்பித்தோட்டம் ;

எல்லோரும் வந்தனர் 
ஜோடியாக ;
நான் மட்டும் நின்றேன்
தனியாக ;

வயதான காவலரும்
வயதாகாத காற்றுமே
எந்தன் துணைகள் ;

என் செய்வதென்று
தெரியவில்லை ;

எட்டே கால் அடிக்க - இன்னும்
எண்பது நிமிடங்கள்
இருந்ததால் என்
இரண்டே கால்
கொண்டு அங்கும்
இங்கும் உலாவினேன் ;

அலைந்த மனது 
உலைந்தது ;

உலைந்த மனது
அலைந்தது ;

அருகிலிருந்த படிக்கட்டில்
சிறிது உட்கார்ந்து - கொஞ்சம்
நேரத்தைத் தின்றேன் ;

பிறகு செல்லுக்குள்
சென்று விளையாடி - கொஞ்சம்
நேரத்தைக் கொன்றேன் ;

ஆமையாக ஊர்ந்த
நேரம் திடீரென்று
ஓட்டுக்குள்ளே தன்னை 
இழுத்துக் கொண்டது ;

அய்யகோ என்றேன் ;

பின் மறுபடியும்
வெளியே வந்து
வழக்கம் போல்
ஊரத் தொடங்கியது;

அது ஊரினும்,
என்னுள்ளே - மெல்ல
மெல்ல சலிப்பு
ஊறத் தொடங்கியது;

எட்டே காலுக்கு
இன்னும் அறுபது 
நிமிடங்கள் இருந்தன ;

எதிரே பார்த்தேன் ;

ஒரு தனியார்
வங்கியின் ஏ.டி.எம் இருந்தது ;

அருகிலேயே ஒரு
தனியார் பிச்சைக்காரன் இருந்தான் ;

காண்பதற்குச்  சிரி(ற)ப்பாக இருந்தது ;

சாலையில் வாகனங்கள்
அதிகமாக இருந்தன ;

மனிதர்கள் குறைவாகவே
இருந்தார்கள் ;

அது
மாலை இரவாக
மாறிக் கொண்டிருந்த
நேரம் ;

கறுப்புப் போர்வையைப்
போர்த்துக் கொண்டிருந்தது
வானம் ;

அந்த 
வானத்தைப் பார்த்தேன் ;
உடுக்கள் சிரித்தன ;
நானும் பதில் சிரித்தேன் ;

யாருக்கும் காத்திராமல்
மேகங்கள் சென்று
கொண்டே இருந்தன ;

மேகத்துக்குச் செல்லும்
நேரம் என்
தேகத்திற்குச் செல்லவில்லையே
என்று அயர்ந்தேன் ;

அயர்வு போனதும்
பூமியைப் பார்த்தேன் ;

பூமியைக் காலாரக்
கண்டதுண்டு - ஆனால் 
அப்போது தான் 
கண்ணாரக் கண்டேன் ;

பூமிக்கும் நமக்கும்
எத்தனை தடைகள் ?!!

சாலை மட்டுமா ? 
நம் காலை 
அலங்கரிக்கும் செருப்பும் 
அல்லவோ தடை ?

எட்டே காலடிக்க
இன்னும் நாற்பது
நிமிடங்கள் இருந்தன ;

காற்று வீசிப்
பார்த்திருக்கிறேன் - அன்று
தான் காற்று
பேசிப் பார்த்தேன் ;

என்ன அழகாகப்
பேசியது தெரியுமா ?

பாவம், காற்றுக்காக
யாரும் நேரம்
ஒதுக்குவதே இல்லை ;

அதனால் அன்று
நான் ஒதுக்கினேன் ;

காற்று நம்மை
ஒதுக்கி விட்டால்
என்னாகுமென்று யோசித்தேன் ;

அதிர்ந்து போனேன் ;

காற்றுக்குக் கால்
என்றொரு பெயருண்டு ; என்னோடு
பேசியதால் அதற்கு
வாய் என்று பெயர் வைத்தேன் ;

எட்டே காலடிக்க
இன்னும் இருபது
நிமிடங்கள் இருந்தன ;

சன்னமாக சில
காகங்களின் குரல்
கேட்டது எனக்கு ;

நீ இரவில் 
கூட கரைவாயா ?
என்று வியந்தேன் ;

அதன் கூட்டுக்குள்
என்ன நிலவரமோ ?

"கூட்டுக்" குடும்பம் 
என்றாலே பிரச்னை
தான் போலும் ;

சற்று மேலே
பார்த்தேன்;

சடசடவென்று ஒரு 
வெளவால் பறந்தது ;

பின்னாடியே போனேன் ;

கொஞ்ச தூரத்திற்குப்
பிறகு ஒரே கும்மிருட்டு ;

அது போய்விட்டது - என்னால்
போக முடியவில்லை ;

வெளவால் பெரிய 
திறமைசாலி தான் ;

இருட்டு வந்தாலே
பயம் மனிதர்க்கு ;
இருட்டு வந்தாலே
ஜெயம் வெளவாலுக்கு ;

நம்மைச் சுற்றி
எத்தனை அற்புதங்கள் ;

மனிதனுக்கு மேலே
எத்துணை அதிசயங்கள் ;

அக்கணத்தில் அப்படியே
ஓரெண்ணப் பெருவெளியில்
தொலைந்து கொண்டிருந்தேன் ;

அவ்வமயம் நண்பன் 
"பாம் பாம்" என்று
ஹாரன் அடித்து
"ஹாய் மச்சி
சாரி டா 
கொஞ்சம் லேட்டாயிடுச்சு " 
என்று சொல்லி 
வண்டியிலிருந்து இறங்கினான் ;

அய்யய்யோ,
எட்டே கால்
வந்து விட்டதே
என்று உடைந்து போனேன் ;